வெந்தயம் அஞ்சறைபெட்டியில் இருக்கும் உணவுகளில் முக்கியமானது. உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரக்கூடியது என்பதாலேயே இவை உணவில் நீங்கா இடம்பிடிக்கிறது. வெந்தயத்தின் மருத்துவகுணங்கள் குறித்து பல கட்டுரைகள் உண்டு. தீரா நோய்களை கட்டுக்குள் வைப்பது சரும அழகு வரையிலும் இதன் பலன்கள் உண்டு. கசப்பு நிறைந்த நலன் தரும் மாத்திரைகள் என்று வெந்தயத்தை சொல்லலாம்.
வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்:
மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நீர் சத்து, புரதச் சத்து போன்றவை வெந்தயத்தில் அடங்கியுள்ளது. இது தவிர சுண்ணாம்புச்சத்து, சோடியம் சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற தாது பொருட்களும், ரிபோபிளேவின், தயாமின், வைட்டமின் ஏ, போன்ற சத்துகளும் அடங்கியுள்ளன.
வெந்தயம் உட்கொள்ள சிறந்த வழி என்ன:
ஒரு ஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் வெந்நீரில் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் ஊற விடவும். சுவைக்காக எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை தேன் சேர்த்து வடிகட்டி, சூடான தேநீராக பருகலாம்.
இதய அடைப்பை தவிர்க்க:
வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் சத்தினால் நம் இதயத்துடிப்பும், ரத்தக் கொதிப்பும் சீராக இருக்கும். வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்தானது இதய அடைப்பை வரவிடாமல் தடுக்கிறது. வெந்தயத்தை சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை, இவைகள் அனைத்தையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு நீருடன் தேன் கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை நீங்கும்.
வெந்தய விதைகள் மற்றும் கீரைகள்:
வெந்தய விதைகள் ஒரு சுவையூட்டும் பொருளாக மட்டுமல்லாமல் அவை மருத்துவ குணமிக்கவையாகவும் உள்ளன. குளிர்காலத்தில், வெந்தயக் கீரைகள் இந்தியாவில் ஏராளமாக கிடைக்கின்றன.
மேலும் மக்கள் இந்த சற்றே கசப்பான ஆனால் ருசியான மூலிகையிலிருந்து தயாரிக்கப்படும் சுவையான உணவுகளை சாப்பிட விரும்புகிறார்கள்.
ஆய்வுகள்:
இந்த அற்புத மூலிகையில் பல நன்மைகள் உள்ளன. அவற்றில் சில அவ்வப்போது நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையின்படி, 25-100 கிராம் வெந்தய விதைகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கிறது.
சர்க்கரையை கட்டுப்படுத்தும்:
உடலில் குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்த வெந்தயம் உதவுகிறது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. வெந்தயம் செரிமானத்தைத் தடுப்பதுடன், இரத்த குளுக்கோஸைக் குறைக்க உதவும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. இது சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை உறிஞ்சுதல் விகிதத்தை குறைப்பதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
பெண்களின் உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ளவும்:
பெண்களுக்கு மாதவிலக்கு வருவதற்கு முன் சில உபாதைகள் ஏற்படும். இந்த உபாதைகளை குறைக்க வெந்தயம் உதவியாக உள்ளது. முதன்முதலில் மாதவிடாய் ஏற்படும் சமயத்திலும், கர்ப்ப காலத்திலும் பெண்களுக்கு உடம்பில் ஏற்படும் சூட்டை தணிக்கவும், மனநிலை மாற்றத்தை சரி செய்யவும் வெந்தயத்தை சிறிதளவு வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் நல்ல பலனை அடையலாம்.
கொலஸ்ட்ராலை குறைக்கவும்:
நம் உடலில் உள்ள கொழுப்புப் புரதத்தை இது குறைப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நம் உடலின் எடையை குறைக்கலாம்.
காய்ச்சலைக் குறைக்கவும்:
வெந்தயத்தூள் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் இவைகளை நீரில் கலந்து குடிக்க காய்ச்சல் குறையும். உடல் இழந்த ஆற்றலை மீண்டும் பெறும். வெந்தயத்தில் உள்ள பசை தன்மையானது இருமலையும் குறைக்கிறது.
உணவில் சேர்க்கவும்:
இரத்தச் சர்க்கரையைக் குறைப்பதைத் தவிர, வெந்தய விதைகள் கொழுப்பைக் குறைக்க உதவும் சபோனின்களின் சிறந்த மூலமாகும்.
வெந்தயத்தை உங்கள் உணவில் சேர்க்க பல வழிகள் உள்ளன. நீங்கள் அதை கூட்டுக்களுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது உங்கள் மாவில் சேர்த்து உண்ணலாம். இரவே ஊறவைத்து, காலையில் அதை உங்கள் தேநீரில் கலந்து குடிக்கலாம்.